வெல்டிங் பட்டறை உரிமையாளர் சரமாரி குத்திக்கொலை
களக்காடு அருகே, வெல்டிங் பட்டறை உரிமையாளர் கத்தியால் சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்டார். ரத்தம் சொட்ட, சொட்ட ஓடி வந்து வீட்டு முன் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
களக்காடு:
களக்காடு அருகே, வெல்டிங் பட்டறை உரிமையாளர் கத்தியால் சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்டார். ரத்தம் சொட்ட, சொட்ட ஓடி வந்து வீட்டு முன் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வெல்டிங் பட்டறை
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் பழனிமுருகன் என்ற பிரின்ஸ் ராஜா (48). இவர் ஏர்வாடியில் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார்.
சிதம்பரபுரம் கீழரத வீதியை சேர்ந்தவர் தயாநிதி. இவருக்கும், அவரது மகன் செல்வராஜ் என்ற பருத்தி வீரனுக்கும் (42) இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இதுசம்பந்தமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தந்தைக்கும், மகனுக்கும் தகராறு ஏற்பட்டது.
சமரசம் செய்தபோது தாக்குதல்
இதைத்தொடர்ந்து பழனிமுருகன் தலையிட்டு, இருவரையும் சமரசம் செய்தார். அப்போது பழனிமுருகன், செல்வராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பழனிமுருகன் மீது செல்வராஜூக்கு ஆத்திரம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு பழனிமுருகன் அங்குள்ள அம்மன் கோவில் ஆர்ச் அருகே வந்து கொண்டிருந்தார். இதனைப்பர்த்த செல்வராஜ், அவரது தம்பி சவுந்தரராஜன் (38) ஆகியோர் பழனிமுருகனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் கடும் வாக்குவாதமும் எழுந்தது.
குத்திக்கொலை
தகராறு முற்றியதால் செல்வராஜ், அவரது தம்பி சவுந்தரராஜன் ஆகியோர் சேர்ந்து பழனிமுருகனை தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் இடது நெஞ்சு பகுதியில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த சொட்ட, சொட்ட அருகில் உள்ள அவரது வீட்டிற்கு அலறியடித்தபடி ஓடி வந்தார்.
ரத்தம் பீறிட்டு பாய்ந்ததால் வீட்டிற்குள் செல்ல முடியாமல் வாசலிலேயே விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார்.
போலீஸ் விசாரணை
இதை அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆட்களை கண்டதும் செல்வராஜூம், சவுந்தரராஜனும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி, களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிமுருகனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது
இந்தநிலையில், தப்பி ஓடிய செல்வராஜ், சவுந்தரராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பழனிமுருகன் என்ற பிரின்ஸ் ராஜாவுக்கு பொன்சீலா பிரான்ஸ்சிஸ்கா என்ற மனைவியும், வினோலின் மேரி, வின்ஸ்லின் மேரி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
வெல்டிங் பட்டறை உரிமையாளர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் களக்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.