கருங்குழியில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.18¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்
கருங்குழியில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் ரூ.18¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்.
வடலூர்,
கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகாக்களில் நடந்த ஜமாபந்தி மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வடலூர் அருகே கருங்குழி கிராமத்தில் வருவாய் துறை சார்பில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் அதியமான் கவியரசு வரவேற்றார்.
நலத்திட்ட உதவிகள்
விழாவில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்கள் நலன் கருதி, அவர்களது தேவையை பூர்த்தி செய்யும் விதமாக எண்ணற்ற திட்டங்களை செயல் படுத்தி வருகிறார்.
தற்போது, வருவாய் தீர்வாய நிறைவு விழாவில் பல்வேறு தாலுகாக்களில் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 251 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கான ஆணையும், 75 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையும், 10 பயனாளிகளுக்கு பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணை என்று மொத்தம் 402 பயனாளிகளுக்கு 18 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
3,774 பணிகள்
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக 3,774 பணிகள் ரூ.85.45 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. இந்த அரசு மக்களுக்கான அரசு ஆகும். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் மேம்படுத்துதல், குறிப்பாக பெண்களுக்கு தொடர் வருமானம் ஈட்டித்தரும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குனர் (கால்நடைபராமரிப்புத்துறை) குபேந்திரன், வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமார், நகராட்சி துணை தலைவர் சுப்பராயலு, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் கோகிலாகுமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், நாராயணசாமி, வடலூர் நகர செயலாளர் தமிழ்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி முருகன், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயலாளர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.