258 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி போலனஅள்ளி கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 258 பயனாளிகளுக்கு ரூ.1.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
நல்லம்பள்ளி வட்டம் சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி போலனஅள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. முன்னிலை. வகித்தார். தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் வரவேற்று பேசினார். இந்த முகாமில் 258 பயனாளிகளுக்கு ரூ.1.51 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
அப்போது கலெக்டர் பேசுகையில், மக்கள் பயன்பெறுகின்ற வகையில் அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டங்களை மக்கள் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும். நலத்திட்டங்கள் பெறுவது மட்டுமல்லாமல் அத்திட்டங்களினால் சுயமாக வருவாய் ஈட்டி, தங்கள் பொருளாதாரத்தையும், வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தி கொள்வதற்கு இத்தகைய அரசின் திட்டங்களை மூலதனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கண்காட்சி
முன்னதாக முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளிக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு கலெக்டர் சாந்தி விளக்கமாக எடுத்துக் கூறினார்.
இந்த முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி, தாசில்தார் பெருமாள், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காமராஜ், மாதையன், ஊராட்சி மன்ற தலைவர் கந்தம்மாள் சேட்டு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.