கூட்டுறவு வாரவிழாவில் ரூ.10¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்
தேனியில் நடைபெற்ற கூட்டுறவு வாரவிழாவில் ரூ.10¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
தேனியில் 69-வது கூட்டுறவு வார விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் 1,204 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 80 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும் சிறப்பாக செயல்பட்ட 25 கூட்டுறவு சங்கங்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள், 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற கூட்டுறவு பணியாளர்களின் குழந்தைகள் ஆகியோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
இந்த விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஜீவா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.