ரூ.30.87 கோடியில் நலத்திட்ட உதவிகள்
ரூ.30.87 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கூட்டுறவு துறையின் சார்பில் நேற்று கூட்டுறவு வார விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள். தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான கேடயங்களை வழங்கினர்.
விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 213 வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் தவிர வீட்டு வசதி துறை, பால்வளத்துறை, சமூக நலத்துறை மற்றும் பட்டு வளர்ச்சிதுறை போன்ற துறைகளிலும் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் 2022 முடிய அனைத்து நிறுவனங்களின் மூலம் என மொத்தம் பயிர்கடன் உதவி உள்பட 1,24,139 நபர்களுக்கு ரூ.95.67 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையில் பணியாற்றி வரும் அனைத்து பணியாளர்களுக்கும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதையடுத்து மொத்தம் 3,586 பயனாளிகளுக்கு ரூ.30 கோடியே 86 லட்சத்து 74 ஆயிரத்து 953 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் ரவிச்சந்திரன், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சேங்கைமாறன், வேளாண்மைதுறை இணை இயக்குனர் தனபால், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், யூனியன் சேர்மன் சண்முக வடிவேல், பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.