மாற்றுத்திறனாளிகள் 127 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 127 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், உதவி கலெக்டர் பிரியங்கா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அடிப்படை வசதிகள், உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 262 பேர் மனு கொடுத்தனர்.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார். இதையடுத்து கணவரால் கைவிடப்பட்ட 3 பெண்கள் உள்பட 13 பேருக்கு பாலகிருஷ்ணாபுரம், பள்ளப்பட்டி, பிள்ளையார்நத்தம் ஆகிய மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் சார்பில் தொழில் கடன்களை கலெக்டர் வழங்கினார்.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர், பேட்டரி சக்கர நாற்காலிகள், 3 சக்கர சைக்கிள்கள், சிறப்பு மேஜை நாற்காலிகள் என மொத்தம் 127 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 43 ஆயிரத்து 527 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.