329 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


329 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x

சேலத்தில் நடந்த விழாவில் 329 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42.72 லட்சம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

சேலம்

சேலத்தில் நடந்த விழாவில் 329 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42.72 லட்சம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

அரசு நலத்திட்ட உதவிகள்

சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு 329 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42.72 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

அதிக கவனம்

மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக மறைந்த முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்ற தனித்துறையை உருவாக்கினார். தற்போது மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்திடும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை சென்றடைய செய்ததில் சிறந்த மாவட்டமாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரூ.74.45 கோடியில் உதவி

சேலம் மாவட்டத்தில் தற்பொழுது வரை 71,776 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 12,609 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.58.6 கோடியும், 4,907 மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1.44 கோடியும், 698 பயனாளிகளுக்கு சிறப்பு பள்ளிகள் மற்றும் உணவூட்டும் மானியமாக ரூ.1.62 கோடியும், 1,375 பயனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிக்கடனாக ரூ.6.55 கோடியும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.27.35 லட்சம் மதிப்பில் செயற்கை அவயங்களும், 129 பயனாளிகளுக்கு ரூ.12.97 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்களும், 97 நபர்களுக்கு ரூ.9.41 லட்சம் மதிப்பில் சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் தையல் எந்திரங்கள், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், பெட்ரோல் ஸ்கூட்டர்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 21,474 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.74.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலசந்தர், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, துணை மேயர் சாரதாதேவி, சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம். செல்வகணபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story