304 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
புதுச்சத்திரம் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 304 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ்.நாட்டாமங்கலத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி பேசினார். கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை வரவேற்றார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு ரூ.4 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் 304 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் 3 புதிய திட்டப்பணிகளுக்கு நிர்வாக அனுமதியையும் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:- பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் நாமக்கல் மாவட்டம் மாநிலத்திற்கு முன்மாதிரியாக உள்ளது. குறிப்பாக தாய்மையுடன் நாம் திட்ட செயலியை கலெக்டர் அறிமுகப்படுத்தினார். அது தமிழகத்திற்கு முன்மாதிரி திட்டமாக உள்ளது. முதல்வரின் முகவரி திட்டத்தின் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவகுமார், உதவி கலெக்டர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், தாசில்தார் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன், அட்மா குழு துணைத்தலைவர் கவுதம், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி, எஸ்.நாட்டாமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.