கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி


கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி
x

தென்காசியில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 6 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வழங்கினார்.

தென்காசி

தென்காசி:

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாரத பிரதமர் பராமரிப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிரதம மந்திரி பாதுகாப்பு திட்டம் குறித்த விளக்க கையேடு, 5 வருடத்திற்கான மருத்துவ காப்பீட்டு அட்டை, கல்வி உதவித்தொகை, பிரதம மந்திரி பாதுகாப்பு திட்ட சான்றிதழ் ரூ.10 லட்சத்துக்கான வைப்பு நிதி செலுத்தப்பட்ட அஞ்சல் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை அடங்கிய தொகுப்பு தென்காசியில் 6 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வழங்கினார்.

இந்தத் திட்டப்படி இலவச பள்ளி கல்வி மற்றும் உயர் கல்விக்கான கல்வி கடன் பெறுவதில் உதவி, கல்விக்கடன் வட்டியை இந்த திட்டமே ஏற்றுக்கொள்ளும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 23 வயது வரை ரூ.5 லட்சம் அளவிற்கு மருத்துவ காப்பீடு, வரி கட்டணத்தை இந்த திட்டமே செலுத்தும். மேலும் 18 வயதை எட்டியவுடன் தனிப்பட்ட தேவைகளுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கப்படும். இந்த குழந்தைகள் 23 வயது நிரம்பியவுடன் இந்த திட்டத்தில் இருந்து ரூ.10 லட்சம் நிதி உதவி, 1-ம் முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கல்வி உதவித்தொகை, திறன் பயிற்சி, தொழில்நுட்ப கல்விக்கு ஸ்வனாத் கல்வி உதவித்தொகை மற்றும் ரூ.50 ஆயிரம் கருணைத்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.


நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குணசேகர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துமாரியப்பன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சுப்புலட்சுமி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆல்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story