மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்
மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
கடையம்:
மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
மனுநீதி நாள் முகாம்
கடையம் அருகே கருத்தப்பிள்ளையூர், மேலாம்பூரில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது, அவர் பேசியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் வரும் 40 நாட்களில் ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய பகுதிகளை சுத்தப்படுத்தியும், வாய்க்கால்களை தூர்வாரி நீர் நிலைகளை சீரமைக்கும் பணிகளையும் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் தூய்மை பணிகள் துரிதப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும்.
நீர்நிலைகளில் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்கப்படும் தகவல்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்
இந்த நிகழ்ச்சியில் தென்காசி உதவி கலெக்டர் கெங்கா தேவி, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், வேளாண்மை துறை இணை இயக்குனர் தமிழ் மலர், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெயபிரகாஷ், தென்காசி தாசில்தார் அருணாச்சலம், தனி தாசில்தார் பட்ட முத்து, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள் முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை துணை இயக்குனர் கிருஷ்ணகுமார், கடையம் வட்டார மருத்துவ அலுவலர் பழனிகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீமூலநாதன், கடையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன் ராணி, தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன், வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) மூகைதீன் பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.