ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள்
ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்
தேனி மாவட்டத்தில் 5 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) கடந்த 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 7-ந்தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது. ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதில், பட்டா மாறுதல், வீட்டுமனைப்பட்டா, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சாதிசான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நலிந்தோர் உதவித்தொகையாக 4 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம், 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான உத்தரவு ஆகிய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முரளிதரன் வழங்கினார். இதில், தாசில்தார் திருமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.