சிறப்பு மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள்
ஜோலார்பேட்டை அருகே நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை அருகே நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
சிறப்பு மருத்துவ முகாம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மக்களை தேடி மருத்துவத்திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள், கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 10 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள், 14 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், 5 நபர்களுக்கு நத்தம் பட்டாகள், 5 நபர்களுக்கு பட்டாக்கள், மற்றும் 1 நபருக்கு வாரிசு சான்றிதழ் என மொத்தம் 45 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் வழங்கி பேசினர்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
சிறப்பு மருத்துவர்கள்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற வகையில் மக்கள் நோயில்லாமல் வாழ வேண்டும் என்ற சீரிய நோக்கத்தின் அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் அவர்கள் தமிழகம் முழுவதும் 100 மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறார்.
இந்த மருத்துவ முகாம் சாதாரண மருத்துவ முகாமாக இன்றி அனைத்து விதமான சேவைகளையும் வழங்க வேண்டும்,
எந்த ஒரு சுனக்குமும் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில், அனைத்து சிறப்பு பிரிவுகளுடைய மருத்துவர்கள் இங்கே வந்து பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளித்து, மேல் சிகிச்சை தேவைப்படுகின்ற நபர்களை மேல் சிகிச்சை தொடர்வதற்கும் இந்த முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு ஊராட்சி மன்ற தலைவர்கள் வாயிலாக ஒவ்வொரு ஊரிலும் அறிவிப்பு செய்யப்பட்டு அனைவரும் இங்கு கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவத் துறைக்கு தேவையான அனைத்து விதமான வசதிகள், கட்டிடங்கள், உபகரணங்கள், சீரிய முறையில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த முகாமினை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் இணை இயக்குனர் (நலப்பணிகள்) மாரிமுத்து, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யாசதீஷ்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார் துணைத்தலைவர் ஸ்ரீதேவிகாந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜாஜெகன்,
ஒன்றியக்குழு உறுப்பினர் உமாகன்ரங்கம், வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சிதேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயபாரதிரவிகுமார், முருகன், சங்கர், அனுமந்தன், சுமதிஏழுமலை, மருத்துவர் புகழேந்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஜோலார்பேட்டை அரசு மருத்துவ அலுவலர் ஜி.சுமன் நன்றி கூறினார்.