1,926 பயனாளிகளுக்கு ரூ.12¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, வி.செந்தில்பாலாஜி வழங்கினர்
கரூரில் நடந்த 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 1,926 பயனாளிகளுக்கு ரூ.12¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, வி.செந்தில்பாலாஜி வழங்கினர்.
கூட்டுறவு வாரவிழா
கரூரில் நேற்று 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 1,926 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 33 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள், போட்டிகளில் வெற்றிபெற்ற 16 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் 18 சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் வழங்கினர்.
இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரூ.2,500 கோடிக்கு கடன் அளிக்க
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் மொத்தம் 84 கூட்டுறவு சங்கங்கள் மட்டும் தான் உள்ளது. அனைத்து அலுவலர்களும் கடந்த ஆண்டு மட்டும் 3.5 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து உள்ளார்கள். இந்த புதிய உறுப்பினர்களுக்கு விவசாய கடனாக ரூ.1,200 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் இதுவரை 1.5 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்து உள்ளார்கள். இது கிட்டத்தட்ட 7 லட்சம் உறுப்பினர்களாக ஆகிவிடும். இந்த ஆண்டு புதிய உறுப்பினர்களுக்கு ரூ.2,500 கோடியை தாண்டும் அளவிற்கு கடன் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் இல்லாதவர்களும் உறுப்பினர்களாகி கால்நடை பராமரிப்பு கடன் பெறலாம் என்ற புதிய திட்டத்தை இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் தான் உருவாக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு கடன் கடந்த ஆண்டு ஏறத்தாழ ரூ.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. கரூரில் தான் இவ்வளவு கடன் வழங்கி கரூர் முதல் மாவட்டமாக திகழும் என்று நினைக்கிேறன். இது வரும் ஆண்டில் ரூ.100 கோடியை கூட தாண்டும். அதனால் இலக்கு எதுவும் வைக்காமல் வழங்குவது தான் முதல்-அமைச்சரின் சாதனையாகும்.
மாணவர்களும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்ந்து கடன்களை பெற முடியும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் 6,900 ரேஷன் கடைகளை சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதற்காக குழு அமைக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள 4,481 கூட்டுறவு சங்கங்களில் 1,717 சங்கங்கள் லாபத்தில் இயங்கி வருகிறது. அனைத்து சங்கங்களையும் லாபத்தில் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. லாபத்தில் இயங்கும் சங்கங்களில் இருந்து ஒரு பகுதி நிதியை எடுத்து வரும் காலங்களில் அவர்களுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்ற கூட்டுறவுத் துறையில் வைப்புத் தொகையாக ரூ.68 கோடிக்கு மேல் உள்ளது. 4,441 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உள்ள பொதுமக்களின் தங்க நகைகள் வைப்புத் தொகை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என்றார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறுகையில், கரூர் மாவட்டத்தில் 17,851 பேருக்கு ரூ.63 கோடியில் நகை கடன்கள் தள்ளுபடியும், 13,804 பேருக்கு ரூ.30 கோடி அளவிற்கான மகளிர் சுய உதவிக் குழுக்கான கடன்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. வட்டி இல்லா கடன்கள் கடந்தாண்டு 31,678 விவசாயிகளுக்கு ஏறத்தாழ ரூ.223 கோடி வழங்கப்பட்டிருக்கின்றன. மகளிர் சுய உதவிக் குழுக்களை கடந்தாண்டு 4,094 உறுப்பினர்களுக்கு ரூ.7 கோடியே 22 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு ஆறு மாத காலத்தில் குறிப்பாக 7,537 பேர் பயன்பெறக்கூடிய வகையில் ரூ.14 கோடியே 34 லட்சம் வட்டி இல்லா கடன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. கால்நடைகளுக்கு வட்டி இல்லா பராமரிப்புக்கான கடந்தாண்டு 2,031 பேர் பயன்பெறக்கூடிய வகையில் ரூ.13 கோடியே 75 லட்சம் கடனாக வழங்கப்பட்டன. இந்த ஆண்டு 8,391 பேர் பயன்பெறக்கூடிய வகையில் ரூ.59 கோடியே 49 லட்சம் இதுவரை கால்நடை பராமரிப்புக்கான வட்டி இல்லா கடன்கள் வழங்க பட்டிருக்கின்றது. கரூர் மாவட்டத்திற்கு 3 லட்சத்து 10 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.130 கோடியில், ரூ.4,000 ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஒன்றரை ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் 12 பகுதி நேர கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. 7 கடைகளுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. பொங்கல் பரிசு தொகுப்பு பொறுத்தவரை ரூ.17 கோடி மதிப்பிலான பொருட்கள் 3,20,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக கரூர் மாவட்ட கூட்டுறவுத் துறை மூலமாக கடந்தாண்டு கடன் பெற்றிருக்கக் கூடிய எண்ணிக்கை 84,562. அதற்கு வழங்கப்பட்ட தொகை ரூ.345 கோடி. இந்த ஆண்டு இந்த 6 மாத காலத்தில் 57,908 பேருக்கு ரூ.350 கோடியே 30 லட்சம் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. என்றார்.