309 பயனாளிகளுக்கு ரூ.18.58 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


309 பயனாளிகளுக்கு ரூ.18.58 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x

நெல்லையில் 309 பயனாளிகளுக்கு ரூ.18.58 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் மாணவிகள் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.18.58 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கமானது சிறுபான்மை இனத்தை சார்ந்த பின்தங்கிய நிலையில் உள்ள முஸ்லிம் மகளிருக்கு உதவும் வகையில் மாவட்ட கலெக்டரை தலைவராகவும், மகளிர் திட்ட அலுவலரை பதவிவழி துணை தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை பொருளாளராகவும் கொண்டு இயங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த சங்கம் திரட்டும் நிதி ஆதாரத்திற்கு ஏற்ப அரசிடமிருந்து மானியத்தொகை அளிக்கப்படும். சங்க நிதியுடன் அரசு நிதியும் சேர்த்து சங்க பொருளாதார நிலையில் பின்தங்கிய முஸ்லிம் மகளிர்களுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் 266 முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, 43 பேருக்கு மாற்றுத்திறனாளி உபகரணங்கள் பெற உதவித்தொகை என மொத்தம் 309 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதன்பின்னர் வீரமாணிக்கபுரம் சிறுபான்மையினர் நலப்பள்ளி, கல்லூரி மாணவிகள் விடுதியில் செம்மொழி நூலகத்தை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா, கவுரவ செயலாளர் செய்யது அகமது, இணை செயலாளர் செய்யது அகமது கபீர், மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா மற்றும் அரசு அலுவலர்கள், இஸ்லாமிய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story