ரூ.35 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
எருமாட்டில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில், ரூ.35 லட்சத்தில் 191 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
பந்தலூர்,
எருமாட்டில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில், ரூ.35 லட்சத்தில் 191 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய திட்டங்கள், தையல் எந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் உள்பட மொத்தம் 191 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 30 ஆயிரத்து 996 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள், நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், சிலர் சமூக வலைத்தளத்தில் முதியோர் உதவித்தொகை, பல்வேறு அரசு திட்ட உதவிகளை நிறுத்தி விட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர். இதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
பயன்படுத்த வேண்டும்
பொதுமக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை வருவாய்த்துறை மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளிடம் மனுவாக அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் என்னை நேரில் சந்தித்து புகார் அளித்தால், குறைகளை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறந்த முறையில் பிரசவம் பார்க்கப்படுகிறது. மேலும் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். குழந்தைகளை அரசு பள்ளி, கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும். வளர்ச்சி பணிகளுக்காக கூடலூர் நகராட்சிக்கு ரூ.7.50 கோடி, நெல்லியாளம் நகராட்சிக்கு ரூ.3.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நெலாக்கோட்டை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். முகாமில் கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா, பந்தலூர் தாசில்தார் நடேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாவட்ட ஊராட்சி செயலாளர் முத்துகருப்பன், ஊராட்சி உதவி இயக்குனர் சாம் சாந்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் லில்லி ஏலியாஸ், டெர்மிளா பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.