49 பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழாவில் 49 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வழங்கினர்.
சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழாவில் 49 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வழங்கினர்.
சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா
சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., உதவிகலெக்டர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சிறுபான்மையினர் நலஅலவலர் சீதா வரவேற்றார்.
விழாவிற்கு வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசுகையில், நம்நாட்டு சட்டத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் இந்துகள் மற்றும் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினருக்கும் சமஉரிமை வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு பல்வேறு பிரிவுகளின்கீழ் அரசு நலத்திட்ட உதவிகள், சலுகைகள் வழங்கி வருகிறது. சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழக அரசின் செயல்திட்டங்கள் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு சிறுபான்மையினருக்கு கல்விக்கடன், தொழில்தொடங்க கடனுதவி, தையல் எந்திரம், மெக்கா, ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், சலுகைகளை சிறுபான்மையினர் விண்ணப்பித்து பெற்று பயன் பெற வேண்டும் என்றார்.
ரூ.4¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன், ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் 49 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 74 ஆயிரத்து 640 மதிப்பில் சிறுத்தொழில் செய்ய உதவித்தொகை, மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் எந்திரங்கள் மற்றும் 15 பேருக்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள் ஆகியவற்றை வழங்கினர்.
விழாவில், கலெக்டர் அலுவலக பொதுமேலாளர் பாலாஜி, சென்னையை சேர்ந்த புத்த பிட்ஜி பதந்த நாகராஜன், முஸ்லிம் மகளிர் நலச்சங்க உறுப்பினர் முகமது பைதுல்லா, கவுன்சிலர் கணேஷ்சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.