மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருச்சி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். மத்திய மண்டல போலீஸ் ஜ.ஜி. கார்த்திகேயன், மாநகர போலீஸ்கமிஷனர் சத்தியபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி வரவேற்றார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, 60 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்தில் இணைப்பு சக்கரம் பொருத்திய மோட்டார் சைக்கிள்களை வழங்கினார்கள். பின்னர், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் வாங்கப்பட்ட பேட்டரி காரை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.

மேலும் மண்ணச்சநல்லூர் பாளையூரில் பாம்பு கடித்து இறந்த தங்கம்மாளின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி, கிறிஸ்தவ மகளிர் உதவி சங்கத்துக்கு ரூ.5¼ லட்சம் நலத்திட்டங்கள் ஆகியவற்றையும் அமைச்சர்கள் வழங்கினர். இதைத்தொடர்ந்து கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளுக்கும் ரூ.47 லட்சத்தில் பேட்டரியில் இயங்கும் 31 குப்பை அள்ளும் வாகனங்கள் வழங்கப்பட்டன.நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், துணைமேயர் திவ்யா, கமிஷனர் டாக்டர் வைத்திநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) காளியப்பன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி சந்திரமோகன் நன்றி கூறினார்.


Next Story