1,030 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
சேலம் தொங்கும் பூங்காவில் நடந்த விழாவில் 1,030 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை மற்றும் சேலம் மாவட்ட வருவாய், பிற்படுத்தப்பட்டோர், வேளாண்மை, ஊரக வளர்ச்சி, கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து 1,030 பேருக்கு ரூ.18 கோடியே 33 லட்சத்து 46 ஆயிரத்து 546 மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று தொங்கும் பூங்காவில் நடந்தது.
கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் புதிதாக கட்டப்பட்ட 100 ரேஷன் கடைகளை திறந்து வைத்தார். பின்னர் தொழில் அதிபர்களுக்கு பொன்னாடை அணிவித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மு.க.ஸ்டாலின் வருகிறார்
கிராமப்புற மக்களின் குடிநீர் தேவைக்காக ரூ.54 கோடியில் நடந்து வரும் திட்டப்பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். சேலம் மாவட்டத்திற்கு அடுத்த மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். அப்போது மாவட்டத்திற்கு புதிதாக ரூ1,000 கோடியில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து முடிவுற்ற திட்டப்பணிகளையும் திறந்து வைக்கிறார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் 75 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஆட்சிக்கு மக்கள் உறுதுணையாக இருந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், தயாநிதி மாறன், எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், துணை மேயர் சாரதாதேவி, கிழக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சுரேஷ்குமார், அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி, கவுன்சிலர்கள் தெய்வலிங்கம், சாந்தமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா நன்றி கூறினார்.
பசுமை வெளிப்பூங்கா
முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து சேலம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் ரூ.1 கோடியே 32 லட்சத்தில் அமைக்கப்பட்ட பசுமை வெளிப்பூங்காவை திறந்து வைத்தார்.
பின்னர் கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்கள பணியாளர்களை நினைவு கூறும் வகையில் சேலம் மாநகராட்சி அலுவலகம் எதிரில் ரூ.41 லட்சத்தில் அமைக்கப்பட்ட முன்கள பணியாளளின் நினைவு சின்னத்தை கே.என்.நேரு திறந்து வைத்தார்.