மனுநீதி நாள் முகமில் 119 பேருக்கு நலத்திட்ட உதவி
கெங்கநல்லூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகமில் 119 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெங்கநல்லூர் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பாபு, ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் ஆகியோர் வரவேற்று பேசினர். வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, அணைக்கட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீரா பென்காந்தி, அணைக்கட்டு ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், குமார பாண்டியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு 119 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர். முன்னதாக முகாமில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர். வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் அணைக்கட்டு மண்டல துணை தாசில்தார் ராமலிங்கம் நன்றி கூறினார்.