148 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


148 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 23 Dec 2022 6:45 PM GMT (Updated: 23 Dec 2022 6:46 PM GMT)

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில், 148 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

நீலகிரி

ஊட்டி

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில், 148 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் அம்ரித் 148 பயனாளிகளுக்கு ரூ.18.17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐ.நா.சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் அனைத்தும், டிசம்பர் 18-ந் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தினமாக கடைபிடித்து வருகிறது. அதன் அடிப்படையில் நீலகிரியில் ஆண்டுதோறும் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்த 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, உலமாக்களுக்கு தமிழக அரசின் சார்பில், மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனம், விலையில்லா சைக்கிள்கள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு முகாம்கள்

பெண்களுக்கு தேவையான மகப்பேறு உதவித்தொகையும், விபத்து ஈட்டுறுதி தொகையும், ஈமச்சடங்கு தொகையும் வழங்கப்படுகிறது. நீலகிரியில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 513 பயனாளிகளுக்கு ரூ.65.23 லட்சம் மதிப்பிலும், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 136 பயனாளிகளுக்கு ரூ.27.80 லட்சம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் டாம்கோ நிறுவனத்தின் மூலம் சிறுபான்மையினர் மக்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

கூடலூர் பகுதியில் சிறப்பு முகாம்கள் நடத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு தங்களது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லோகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா, மாவட்ட தலைமை காஜி முஜ்புர் ரஹ்மானி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.Next Story