மனுநீதி நாள் முகாமில் 29 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


மனுநீதி நாள் முகாமில் 29 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் 29 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி சமுதாய நலக்கூடத்தில் வைத்து மனுநீதி நாள் முகாம் நடந்தது. முகாமிற்கு சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்.முத்தையா பாண்டியன், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார் வரவேற்று பேசினார்.

ஏற்கனவே நடந்த முன்னோடி மனுநீதி நாள் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 52 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 29 மனுக்கள் ஏற்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விதவை உதவித்தொகை 9 பேருக்கும், முதியோர் உதவித்தொகை 14 பேருக்கும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை 6 பேருக்கும் என மொத்தம் 29 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தோட்டக்கலைத்துறை மூலமாக 2 பயனாளிகளுக்கு பனை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தலா 50 பனை விதைகளும், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கவாத்து செய்யும் கருவியும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், மண்டல துணை தாசில்தார் சிவப்பிரகாசம், வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் திட்டப்பிரிவு ஆணையாளர் ஜெயராமன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளிமயில், விஸ்வநாதப்பேரி பஞ்சாயத்து தலைவர் ஜோதி மணிகண்டன், சிவகிரி நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, சமூக பாதுகாப்பு திட்ட உதவியாளர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கரவடிவு, தேவி சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story