மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 264 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா அறிவுறுத்தினார்.
நலத்திட்ட உதவிகள்
இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமின்றி மனுக்களை வழங்கும் வகையில் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா கலந்து கொண்டார். பின்னர் அவர் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 18 மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சேலம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர்மேனகா தெரிவித்தார். முன்னதாக குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார்.
இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் மயில் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.