மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 41 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 41 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார்.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 360 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
நலத்திட்ட உதவி
கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளிடம் இருது 20 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா பெற்றார். மேலும் 41 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 900 மதிப்பில் கைக்கெடிகாரங்கள், சைக்கிள்கள் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ஆகிய நலத்திட்ட உதவிகளை வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார்
கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்னன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.