மக்கள் தொடர்பு முகாமில் 73 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மக்கள் தொடர்பு முகாமில் 73 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
சிக்கல்:
கூத்தூர் ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 73 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
கூத்தூர் ஊராட்சி
கீழ்வேளூர் ஒன்றியம் கூத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நாகை மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா தலைமை தாங்கினார். கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். முகாமில் வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, சமூக பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் 73 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாந்தி, மண்டல துணை தாசில்தார் துர்காபாய், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், ஊராட்சி தலைவர் ஜீனத்துன்னிசா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வாய்மேடு ஊராட்சி
வாய்மேடு ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார். தாசில்தார் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் வேதரத்தினம், தலைமையிடத்து துணை தாசில்தார் வேதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 9 பேருக்கு பட்டா மாற்றம், 14 பேருக்கு குடும்ப அட்டை, தோட்டக்கலை மற்றும் விவசாயத்துறை சார்பில் 8 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 11 பேருக்கு பட்டா நகல் உள்பட 109 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் வழங்கினார். இதில் மண்டல துணை தாசில்தார் ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், துணை தாசில்தார் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் அறிவழகன் நன்றி கூறினார்.