772 பேருக்கு ரூ.3¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்;அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்


772 பேருக்கு ரூ.3¾ கோடியில் நலத்திட்ட உதவிகள்;அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
x

772 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 94 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

772 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 94 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

நலத்திட்ட உதவி

குமரி மாவட்ட வருவாய், ஆதிதிராவிடர் நலத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு ஆட்சி நிறைவையொட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.

தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உயர்கல்வி பெறுவோா் சதவீதம்

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 7 லட்சத்து 80 ஆயிரம் பேர் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது.

தமிழக அரசின் பள்ளிகளில் செயல்பட்டு வரும் காலை உணவு திட்டம் சிறப்பானது. வருகிற செப்டம்பர் மாதம் இல்லதரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. அகில இந்திய அளவில் பிளஸ்-2 படித்தவர்களில் உயர்கல்விக்கு சேர்பவர்களின் எண்ணிக்கை 24 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பிளஸ்-2 முடித்து உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 75 சதவீதமாக உள்ளது.குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஈடில்லா ஆட்சி, ஈராண்டு சாட்சி என்ற நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை 500 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ்

ரூ.54.27 லட்சம் மதிப்பில் 65 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.55 ஆயிரம் மதிப்பில் இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பில் 4 பயனாளிகளுக்கும் உள்பட பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் மொத்தம் 772 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 94 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புத்தகம் வெளியிட்டார்

இதையடுத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த புத்தகத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார். அதனை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மாநகர ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், திட்ட இயக்குனர்கள் பாபு (ஊரக வளர்ச்சி முகமை), இலக்குவன் (மகளிர் திட்டம்), கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் மற்றும் அரசு அதிகாரிகள், பயனாளிகள் பலா் கலந்து கொண்டனர்.


Next Story