பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்


பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
x

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளில் 14 பேருக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் என மொத்தம் 114 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.36 லட்சத்து 84 ஆயிரத்து 200 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் அமைச்சர்கள் சிவசங்கர், சி.வி.கணேசன் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகம், ஊரக வாழ்வாதார இயக்கம், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்கள் ஆகியவை இணைந்து நடத்திய தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு 793 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். இந்த முகாமில் 2-ம் கட்ட தேர்வுக்கு 100-க்கும் மேற்பட்டோர் தேர்வாகியுள்ளனர். இந்த முகாமில் அயல்நாட்டு வேலை வாய்ப்பிற்கு 5 நபர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, திருச்சி மண்டல வேலைவாய்ப்பு துறை துணை இயக்குனர் சந்திரன், தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமங்களின் செயலாளர் நீல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் நேற்று முன்தினம் பெய்த மழையின் போது எளம்பலூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட பெரம்பலூர் முத்துலட்சுமி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கட்டிட வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மனைவி சாவித்திரி மின்னல் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை அமைச்சர்கள் சிவசங்கர், கணேசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து பேரிடர் நிவாரண தொகையின் கீழ் ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினர். பின்னர் அவர்கள் ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆய்வக கூடம், வகுப்பறைகள், சர்வர் அறை, அலுவலா்கள் அறை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story