ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
திண்டுக்கல்லில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடியை கலெக்டர் பூங்கொடி ஏற்றி வைத்தார். பின்னர் அவர், ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சுதந்திர தினவிழா
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் பூங்கொடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து சமாதானத்தை உணர்த்தும் வகையில் வெள்ளை புறாக்களையும், தேசியக்கொடியில் இடம்பெற்றுள்ள மூவர்ணத்தில் பலூன்களையும் கலெக்டர் பறக்கவிட்டார்.
இதைத் தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்றபடி கலெக்டர் பூங்கொடி போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அந்த ஜீப்பில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனும் சென்றார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். முன்னதாக முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் இருக்கும் மகாத்மாகாந்தி சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நலத்திட்ட உதவிகள்
இதையடுத்து போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் உள்பட 73 பேர், வருவாய்த்துறை உள்பட பிற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 165 அதிகாரிகள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் பொங்கல் பரிசுத்தொகை, மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்குதல், ரேஷன்பொருட்கள் வினியோகம் ஆகியவற்றை கூட்டுறவுத்துறை மூலம் சிறப்பாக செயல்படுத்தியதற்காக பொது வினியோக திட்ட திண்டுக்கல் துணை பதிவாளர் அன்புக்கரசன், இணை பதிவாளர் அலுவலக ஆ பிரிவு கூட்டுறவு சார்பதிவாளர் அன்பரசன், பொது வினியோக திட்ட துணை பதிவாளர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் பிரஷ்ணேவ், வேடசந்தூர் பொதுவினியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் ராஜாங்கம், பொதுவினியோக திட்ட துணை பதிவாளர் அலுவலக இளநிலை உதவியாளர் இம்ரான்கான் ஆகியோர் கலெக்டரிடம் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றனர். கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி ராமசந்திரனுக்கு சிறந்த ஊராட்சி தலைவருக்கான விருதை கலெக்டர் வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர், இலவச வீட்டுமனை பட்டா, புதிய தொழில் முனைவோர் மானியம், கல்வி உதவித்தொகை, வேளாண் வளர்ச்சி நிதி, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி, இலவச தையல் எந்திரம் மற்றும் இஸ்திரி பெட்டி உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 223 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கலைநிகழ்ச்சிகள்
அதன்பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நிலக்கோட்டை நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் மல்லர்கம்பம் விளையாட்டு பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அதேபோல் இந்திய விடுதலை, நாட்டுப்பற்றை விளக்கும் வகையில் திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி, எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டி.பி.கே.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அச்யுதா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது. இந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி.அபினவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகையதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், துணை தலைவர் பொன்ராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் கோர்ட்டு
அதேபோல் திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் நீதிபதிகள் சரண், விஜயகுமார், ராமச்சந்திரன், தீபா, சாமுண்டீஸ்வரி, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு மோகனா மற்றும் மாஜிஸ்திரேட்டுகள், நீதிமன்ற பணியாளர்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. சரவணன், பழனி நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் பாலமுருகன், பழனி முருகன் கோவில் அலுவலகத்தில் இணை ஆணையர் மாரிமுத்து ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர்.
பொதுவிருந்து
சுதந்திர தின விழாவையொட்டி பழனி கோவில் நிர்வாகம் சார்பில் குடமுழுக்கு அரங்கில் 5 ஆயிரம் பேருக்கு பொதுவிருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு இணை ஆணையர் மாரிமுத்து தலைமை தாங்கினார். அறங்காவலர் குழு உறுப்பினர் சந்திரசேகர், நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, தி.மு.க. நகர செயலாளர் வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். நிகழ்ச்சியில் 100 பேருக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் பழனிவேலு, தி.மு.க. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் நடந்த விழாவில் பொதுமேலாளர் டேனியல் சாலமன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் டீசல் சிக்கனத்தில் சிறப்பாக செயல்பட்ட 15 டிரைவர்கள், அதிக வருவாய் ஈட்டிய 15 கண்டக்டர்கள், சிறப்பாக டயர் பராமரிப்பு மேற்கொண்ட 2 பணியாளர்கள், சிறந்த தொழிற்நுட்ப பணிக்காக கிளை மேலாளர், மேற்பார்வையாளர், அலுவலக கண்காணிப்பாளர், பணியாளர், பயணச்சீட்டு ஆய்வாளர், பயிற்சி டிரைவர், பாதுகாவலர் என மொத்தம் 40 பேருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.