256 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
விழுதோனிபாளையம் ஊராட்சியில் நடந்த சிறப்பு மனுநீதிநாள் முகாமில் 256 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.
மனுநீதி நாள் முகாம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் உள்ள விழுதோனிபாளையம் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தனஞ்செயன், தனிதாசில்தார் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் டி.கனகரத்தினம், சொக்கலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர் நதியாசின்னப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கீதாவிஜயன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் வரவேற்றார்.
கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, தையல் எந்திரம், சலவைப் பெட்டி, விவசாய இடுபொருட்கள், இயற்கைஉரம் உள்பட ரூ.1 கோடியே 46 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 256 பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது:-
உறுதி செய்ய வேண்டும்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கிராமத்தில் அனைவருக்கும் வீட்டுமனை அல்லது வீடு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு அரசு குடியிருப்புகள் கட்டித்தருவது, பழுதான வீடுகளை பழுதுபார்ப்பது, அல்லது இடித்துவிட்டு அரசு செலவில் புதிதாக கட்டித் தருவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுதப்பட்டு வருகின்றது.
கிராமப்புற பகுதிகளில் ரேஷன் கார்டு கிடைக்காதவர்கள் கணக்கெடுக்கப்பட்டு 15 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த தலைமுறை இளைஞர்கள் சிறப்பாக இருக்க பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஒரு முன்னோடி திட்டமாக இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
பயன்பெற வேண்டும்
சிறந்த குடிமக்களை உருவாக்க குழந்தைகளுக்கு நல்ல கல்வி அவசியம். அதே போல் எண்ணும் எழுத்தும் இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிகளில் குழந்தைகள் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை அளித்தனர். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் பண்ணை கருவிகள் உரங்கள் சொட்டு நீர் பாசனங்கள் திட்டங்கள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது இதனை கிடைக்க பெறாதவர்கள் வேளாண் துறை அதிகாரிகளையும், கிராம நிர்வாக அலுவலர்களையும் அணுகி பயன்பெற வேண்டும்.
அரசு பள்ளியில் படித்து, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் இரண்டாம் தவணை திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர்.திருமலை, மருத்துவ அலுவலர்கள் எம்.மாறன்பாபு, எஸ்.விமல்குமார், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் விஜயகுமார் நன்றி கூறினார்.