286 பயனாளிகளுக்கு ரூ.2½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
பாலூர் கிராமத்தில் நடந்த சிறப்பு மனுநீதிநாள் முகாமில் 286 பயனாளிகளுக்கு ரூ.2½ கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.
பாலூர் கிராமத்தில் நடந்த சிறப்பு மனுநீதிநாள் முகாமில் 286 பயனாளிகளுக்கு ரூ.2½ கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.
ரூ.2½ கோடி நலத்திட்ட உதவி
பேரணாம்பட்டு தாலுகா பாலூர், சேராங்கல் கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் பாலூர் கிராமத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலு விஜயன், பேரணாம்பட்டு ஒன்றியக் குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் நெடுமாறன் வரவேற்றார். முகாமில் 345 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 286 மனுக்கள் ஏற்கப்பட்டன. 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 39 மனுக்கள் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
முகாமில் 286 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 56 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
வீட்டுமனை பட்டா
வேலூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் பிரதானமாக நடைபெற்று வருகிறது. இவற்றில் பயிர், பால், தீவன உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு என எண்ணற்ற வகையான விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அரசு உரிய திட்டங்களை வழங்கி ஊக்க தொகை வழங்குகிறது. கடனுதவி, மானியம் தருகிறோம். இதனை பயன்படுத்தி விவசாய உற்பத்தியை பருக்க வேண்டும்.
தோட்டக்கலை பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. பள்ளி செல்லா குழந்தைகள் 1,600 பேரை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கு அனுப்பியுள்ளோம். 6 மாதத்தில் பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதி பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
ஆய்வு செய்தார்
இதனைத் தொடர்ந்து பேரணாம்பட்டு பகுதியில் போலி டாக்டர்கள் அதிகமாக உள்ளனர் என்றும், 2 தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் கூறியதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக கலெக்டர் தெரிவித்தார். பின்னர் பேரணாம்பட்டு நகராட்சிக்கு குப்பை கிடங்கு அமைக்க வீ.கோட்டா ரோட்டில் அரசு புறம்போக்கு இடத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கும் மாறு உத்தரவிட்டார்.
பேரணாம்பட்டு ஒன்றியம் எருக்கம்பட்டு ஊராட்சி கோட்டையூர் கிராமத்திலிருந்து ஆந்திர மாநிலம் கடப்பநத்தம் கிராமத்திற்கு செல்லும் கரடு முரடான சாலை தமிழக வனப் பகுதியில் சுமார் 3.5 கி.மீ தூரம் இருப்பதால் வனப்பகுதியில் சாலை அமைப்பது குறித்து கோட்டையூர் வனப்பகுதிக்குள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மனுநீதி நாள் முகாமில் சப்- கலெக்டர் வெங்கட்ராமன், நகராட்சி தலைவர் பிரேமா, துணை தலைவர் ஆலியார் ஜூபேர் அஹம்மத், நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, சொர்ணலதா, பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி, வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா, பேரணாம்பட்டு அரசுமருத்துவ அலுவலர் திருஞானம் உள்பட பலர் பங்கேற்றனர்.