129 பயனாளிகளுக்கு ரூ.63 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்


129 பயனாளிகளுக்கு ரூ.63 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்
x

குடியாத்தத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 129 பயனாளிகளுக்கு ரூ.63 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வேலூர்

ஜமாபந்தி நிறைவு

குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 24-ந் தேதி தொடங்கிய ஜமாபந்தி நேற்றுடன் முடிவடைந்தது. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார்கள் ரமேஷ், சுபிச்சந்தர், வாசுகி, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் பலராமபாஸ்கர், மஞ்சுநாதன், சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் விஜயகுமார் வரவேற்றார்.

விவசாயிகள் சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதில் மோர்தானா அணையை திறக்க வேண்டும், கிராமப்பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்கவேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், சுடுகாட்டுக்கு இடம் தேர்வு செய்து தர வேண்டும், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், காட்டு விலங்குகளில் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

நலத்திட்ட உதவி

சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு 63 பேருக்கு வீட்டு மனை பட்டா, 7 திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா உள்பட 129 பயனாளிகளுக்கு ரூ.63 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, அரசு வழக்கறிஞர்கள் எஸ்.விஜயகுமார், கே.லோகநாதன், மருத்துவ அலுவலர் மாறன்பாபு, வேளாண்மை உதவி இயக்குனர் உமாசங்கர் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பல்வேறு அரசியல்கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story