நம்பியூரில் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய கூட்டம்- எர்ணாவூர் நாராயணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
நம்பியூரில் தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரிய கூட்டம் நடைபெற்றது. இதில் எர்ணாவூர் நாராயணன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நம்பியூர்
நம்பியூரில் தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரிய கூட்டம் நடைபெற்றது. இதில் எர்ணாவூர் நாராயணன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பனைமர தொழிலாளர்கள்
நம்பியூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.
நம்பியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார், கண்ணன், தங்கமுத்து, முனீஸ்வரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இங்கு 200 பனைமர தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 89 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பனைமரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பனைமர தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டும் பொருளாதாரத்தில் முன்னிலைப்படுத்தும் வகையிலும் மாநிலம் முழுவதும் தொடர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நலத்திட்ட உதவிகள்
ஈரோடு மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய பனைமர தொழிலாளர்கள் தங்களது பெயர்களை வாரியத்தில் பதிவு செய்து வாரியம் மூலம் கிடைக்கும் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.49 லட்சம் மதிப்பில் பனைமர தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நம்பியூர் பகுதியில் உள்ள பனைமர தொழிலாளர்களுக்கு சுமார் 200 பேருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பனை நல வாரியத்தில் சுமார் ஒரு லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பது என உறுதி கொண்டுள்ளோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்காக சிறப்பு கவனம் செலுத்தி பனைமர தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு நலத்திட்டங்களை செய்ய உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வழக்கறிஞர் விநாயகமூர்த்தி, தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், ஆர்.கே.நகர் ராஜேஷ், பனைமர நல வாரிய நிர்வாகிகள், நாடார் சங்க நிர்வாகிகள், சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட செயலாளர் சங்கரகுமார் செய்து இருந்தார்.