நலத்திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும்
வேளாண்மை துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் கூறினர்.
திருவாரூர்;
வேளாண்மை துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் கூறினர்.
கண்காணிப்புக் குழு கூட்டம்
திருவாரூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் சாருஸ்ரீ, எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன் (திருவாரூர்), மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.மேலும் நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நில அளவை பதிவேடுகள் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிர்வாகம் குறித்தும் துறை வாரியாக கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் முதல் நிலை அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
வேளாண்மை துறை
தொடர்ந்து, அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அலுவலர்கள் முழு முனைப்புடன் செயல்படவேண்டும். சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகளை விரைவுப்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நலத் திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வேளாண்மை துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் அனைத்துதரப்பு விவசாயிகளுக்கும் முழுமையாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
குடிநீர் வசதி
கிராமங்களில் குடிநீர் வசதி தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் திட்டங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் அறிவுறுத்தினர். கூட்டத்தில், மாவட்டவருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா (திருவாரூர்), கீர்த்தனாமணி (மன்னார்குடி), மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த், அனைத்து ஒன்றியக்குழு தலைவர்கள், நகர்மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.