தொடர் மழையால் சேதமடைந்த கிணறு


தொடர் மழையால் சேதமடைந்த கிணறு
x

தேவாலா அருகே தொடர் மழையால் குடிநீர் கிணறு சேதமடைந்தது. அங்கிருந்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி

பந்தலூர்,

தேவாலா அருகே தொடர் மழையால் குடிநீர் கிணறு சேதமடைந்தது. அங்கிருந்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மண்ணுக்குள் புதைந்த கிணறு

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட தேவாலா கைதக்கொல்லியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய கிணறு உள்ளது. இந்த கிணறு பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளத்தாக்கான பகுதியில் அமைக்கப்பட்டது. கிணற்றில் இருந்து குழாய்கள் மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கிணற்றின் சுவர் சிதிலமடைந்து உடைந்து காணப்படுகிறது. மேலும் ஒருபுறம் உள்ளே இறங்கி, மண்ணுக்குள் புதைந்தது போல் காட்சி அளிக்கிறது. மழைநீர் கிணற்றுக்குள் அடித்து செல்லப்பட்டதால், கிணறு தண்ணீர் குளத்து நீர் போல் மாறி உள்ளது.

குடிநீர் வசதி

கிணறு சேதமடைந்ததால், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். அவர்கள் குடிநீரை தேடி காலிகுடங்களுடன் அங்கும், இங்கும் அலைகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கைதக்கொல்லியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு கிணறு மட்டும் குடிநீர் ஆதாரமாக இருந்தது. முறையாக பராமரிக்காததால் புதர் சூழ்ந்து காணப்பட்டது.

சமீபத்தில் பெய்த பலத்த மழையால் கிணறு உடைந்து சேதமடைந்தது. இதனால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டதால், நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். குடிநீர் வசதி இன்றி தவித்து வருகிறோம். கைதக்கொல்லி கிராமத்தில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தினமும் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை உள்ளது. எனவே, புதிதாக குடிநீர் கிணறு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story