கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்றபெண்ணிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு
தேனி அருகே கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலியை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி அருகே உள்ள க.விலக்கு பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவர், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீரபாண்டி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அவர்கள் மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களை பின்தொடர்ந்து சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்மநபர் மோட்டார்சைக்கிளில் வந்தார்.
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகே சென்றபோது, சுமதி கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி சங்கிலியை அந்த நபர் பறிக்க முயன்றார். இதில் சுதாரித்து கொண்ட சுமதி சங்கிலியை இழுத்து பிடித்தார். அப்போது 4½ பவுன் சங்கிலி மட்டும் அவரது கையில் சிக்கியது. மீதி 4½ பவுன் நகையை மர்ம நபர் பறித்துவிட்டு தப்பினார். இதுகுறித்து அவர் வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.