எடையந்தாங்கல் கிராமத்தை ஒருங்கிணைத்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்


எடையந்தாங்கல் கிராமத்தை ஒருங்கிணைத்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்
x

எடையந்தாங்கல் கிராமத்தை ஒருங்கிணைத்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் பி.அம்சவேணி பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை

வாங்கூர் ஊராட்சி

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியத்தில் வாங்கூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் வாங்கூர், வரதராஜபுரம், வளர்வாங்கூர், நாராயண குப்பம், அசோகபுரம், எடையந்தாங்கல் ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. 9 வார்டுகள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக பி.அம்சவேணி பெரியசாமி உள்ளார்.

ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து அவர் கூறியதாவது :-

முடிக்கப்பட்ட பணிகள்

எடையந்தாங்கல் பகுதியில் ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.11 லட்சத்து 85 ஆயிரத்தில் இயற்கை முறையில் சுத்திகரிப்பு வசதியுடன் கழிவுநீர் கால்வாய், வாங்கூரில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, வரதராஜபுரம், எடையந்தாங்கல், நாராயணகுப்பம் ஆகிய பகுதிகளில் ரூ.13 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் சுற்றுச்சுவர், வரதராஜபுரம் பகுதியில் ரூ.4 லட்சத்து 11 ஆயிரத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்தி குழாய் இணைப்பு, வரதராஜபுரம் பள்ளிக்கூடத் தெருவில் ரூ.85 ஆயிரத்து 779 மதிப்பில் குழாய் இணைப்பு, அசோகபுரம் பகுதியில் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் குழாய் இணைப்பு, வாங்கூரில் ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 245 மதிப்பில் கழிவுநீர் கால்வாய்வசதி செய்யப்பட்டுள்ளது.

வாங்கூர் மேட்டு தெருவில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் சிமெண்டு சாலை, எடையந்தாங்கல் பகுதியில் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 500 மதிப்பில் மூடி வசதியுடன் கூடிய கழிவு நீர் கால்வாய், வாங்கூர் மேட்டு தெருவில் ரூ.3 லட்சத்து 708 மதிப்பில் குழாய் இணைப்பு ஆகிய பணிகள் நடந்து முடிந்துள்ளன. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு வீடு கட்டித் தரப்பட்டுள்ளது.

குறுங்காடு

வாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிடங்கள், வாங்கூர் நத்தபேட்டை தெருவில் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 166 மதிப்பில் கழிவு நீர் கால்வாய், நாராயணகுப்பம் பகுதியில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை, ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 708 மதிப்பில் குப்பை பிரித்தெடுக்கும் தொட்டி, அசோகபுரம் பகுதியில் ரூ.9 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் புதிய ரேஷன் கடை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நேரடி நெல் கொள்முதல் மையம் அமைக்க இடம் தேடி வருகிறோம்.

எனது தனிப்பட்ட முயற்சியில் எடையந்தாங்கல் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் 700 செடிகளுடன் குறுங்காடுகள் அமைத்தேன். நாராயணகுப்பம் பகுதிக்கு பஸ் வசதி இல்லாமல் இருந்தது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மகளிர் கட்டணமில்லா அரசு டவுன் பஸ் வருவதற்கு ஏற்பாடு செய்தேன். ஒழுகூர் ஏரியிலிருந்து வாங்கூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அதனை அகற்றி கால்வாயை தூர்வாரி வாங்கூர் ஏரிக்கு நீர்வரத்து ஏற்படுத்திக் கொடுத்தேன். அசோகபுரம், எடையந்தாங்கல், நாராயணகுப்பம், வளர்வாங்கூர் ஆகிய பகுதிகளுக்கு பகுதி நேர ரேஷன் கடை அமைத்துக் கொடுத்தேன். 100 நாள் வேலை பணியாளர்களுக்கு பிசியோதெரபி மூலம் மருத்துவம் அளித்தேன். கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தினேன். கொரோனா கால கட்டத்தில் வீடு வீடாக மளிகை பொருட்கள், அரிசி வழங்கினேன்.

குடிநீர், மின்சாரம், தெருவிளக்கு பிரச்சினை, கழிவு நீர் கால்வாய் அடைப்பை தூர்வாருதல், குப்பைகளை வாருதல் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை உடனுக்குடன் நிறைவேற்றுகிறேன்.

தனி ஊராட்சியாக

ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழைய சிமெண்ட் சாலைகளை புதுப்பித்து தர வேண்டும், அசோகபுரம் பகுதியில் உயர் மின் கோபுர மின்விளக்கு அமைத்து தர வேண்டும், நூலக கட்டிடம் அமைத்து தர வேண்டும்.

எடையந்தாங்கல் பகுதியில் உள்ள 4 தெருக்கள் 4 ஊராட்சிகளில் வருகிறது. சோளிங்கர், வாலாஜா ஆகிய 2 ஒன்றியங்கள், ராணிப்பேட்டை, சோளிங்கர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகள் அடங்குகிறது. 4 ஊராட்சிகளில் உள்ள 4 வார்டுகள் இந்த பகுதியில் வருகிறது. அதனால் அரசின் திட்டங்கள் நிறைவேற்றுவதில் சிக்கல், குழப்பம் ஏற்படுகிறது. எனவே எடையந்தாங்கல் கிராமத்தை ஒருங்கிணைத்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி., சோளிங்கர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், மாவட்ட கவுன்சிலர் டி.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் எம்.முருகன் ஆகியோரின் ஒத்துழைப்போடு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரியா வினோத், வார்டு உறுப்பினர்கள் ஏ.அழகரசன், ஆர்.நித்யா, என்.சிவகாமி, டி.கருணாகரன், டி.அம்மு, எம்.சேட்டு, கே.சின்னப்பொண்ணு, எம்.சாரதி ஆகியோருடன் இணைந்து வாங்கூர் ஊராட்சியை ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்மாதிரி ஊராட்சியாக மாற்றுவதற்கு எனது பணியை திறம்பட செய்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story