தம்பதியின் உயிரை பறித்த பட்டாசு விபத்துக்கு காரணம் என்ன?; போலீசார் தீவிர விசாரணை


தம்பதியின் உயிரை பறித்த பட்டாசு விபத்துக்கு காரணம் என்ன?; போலீசார் தீவிர விசாரணை
x

செம்பட்டி அருகே தம்பதியின் உயிரை பறித்த பட்டாசு விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே தம்பதியின் உயிரை பறித்த பட்டாசு விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்து முன்னணி நிர்வாகி

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள வீரக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 40). இவர், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளராக இருந்தார்.

மேலும் இவர், செம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் புல்வெட்டிக்குளம் என்ற இடத்தில் உள்ள வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தார். மற்றொரு கடையை, இந்து முன்னணி அலுவலகமாக பயன்படுத்தினார். மேல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் ஜெயராமன், தனது மனைவி நாகராணி (35), 2 மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்தார்.

தம்பதி பலி

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் அவர் வசித்த வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்தது. அப்போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஜெயராமன், அவரது மனைவி நாகராணி ஆகியோர் உடல் நசுங்கி பலியானார்கள். இவர்களது 3 குழந்தைகளும் வணிக வளாகத்தின் கீழே சாலையோரத்தில் விளையாடி கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வணிக வளாகத்தின் கீழ்தளத்தில் இருந்த வேலுமணி, பாளையங்கோட்டையை சேர்ந்த பழனிசாமி (48) ஆகியோர் பட்டாசு வெடித்ததில் படுகாயம் அடைந்தனர். இதுதவிர வணிக வளாகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 கார்கள், 5 மோட்டார் சைக்கிள்கள் கட்டிடம் இடிந்து விழுந்ததில் சேதமடைந்தன.

காரணம் என்ன?

இதுகுறித்து செம்பட்டி ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்தநிலையில் வணிக வளாகத்தின் மேல் மாடியில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து, தடயவியல் துறை அலுவலர் சங்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். சமையல் செய்தபோது கியாஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு, வெடி விபத்து ஏற்பட்டதா? அல்லது மின் கசிவினால் வெடி விபத்து ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் பட்டாசுகள் இருந்த அறையில் ஜெயராமன், நாகராணி ஆகியோர் வெடி தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை விபத்துக்கான காரணம் புரியாத புதிராகவே உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

அமைச்சர் ஆறுதல்

இந்தநிலையில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது உயிரிழந்த தம்பதியின் உறவினர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார்.

இதேபோல் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்தார். அங்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த ஜெயராமன்-நாகராணி ஆகியோரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர்களது குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.


Next Story