நீட் ஒழிப்பு என்ன ஆனது? பேனாவை காணவில்லையா - திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி


நீட் ஒழிப்பு என்ன ஆனது? பேனாவை காணவில்லையா - திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி
x

நீட் ஒழிப்பு என்ன ஆனது பேனாவை காணவில்லையா என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஆத்துமேட்டில் அண்ணா 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் நடந்தது.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. பொருளாளருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

அ.தி.மு.கவில் உள்ள 75 எம்.எல்.ஏக்களில் 63 எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 2, 692 பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்தார்கள்.

இந்த பிரச்சினைக்கு முன்பு பொதுக்குழு கூட்டத்தில் என்ன பேசவேண்டும் என்பது பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பேசியவர்கள் 2 தலைமை வேண்டாம் மறைந்த எம்.ஜி,ஆர், ஜெயலலிதா இருந்ததுபோல ஒற்றைத்தலைமைதான் வேண்டும் என்று கூறினார்கள். அந்த கூட்டத்தில் தற்போது எதிர்ப்பவரும் இருந்தார். கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் இருந்தனர்.

தொண்டர்கள் மக்கள் ஆதரவு இருந்தால் ஜெயித்து வாருங்கள், அதை விட்டு நான் தான் அதிமுக தலைவர் என்று கூற வேண்டாம். கட்சி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான்.

தி.மு.க. 525 பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது. மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருக்கலாம். ஆனால் மின்சார கட்டணத்தை கடுமையாக உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்படவே இல்லை. அதை ஒப்பிட்டு பார்க்க தி.மு.க. தயாரா? விசைத்தறி தொழிலாளர்கள் மின்கட்டண உயர்வால் பாதிக்கப்படுவார்கள். ஒட்டுமொத்தமாக மின்கட்டண உயர்வு, வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது.

ஏழை குழந்தைகளுக்கு உணவு அளித்தவர் எம்.ஜி.ஆர், ஆனால் காலை உணவு அளிப்பதாக கூறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு மீதம் இருக்கும் தட்டில் கையை கழுவுகிறார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து போட்டு நீட் தேர்வை ஒழிப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். ஓராண்டு முடிந்ததும் நீட் ஒழிப்பு என்ன ஆனது பேனாவை காணவில்லையா? என கேட்டால் யோசித்து கொண்டிருப்பதாக கூறுகிறார்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த மக்கள் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்-அமைச்சராக ஆக்கவேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story