கலாசேத்ரா நடனக்கல்லூரியில் நடப்பது என்ன? 'பிக்பாஸ்' அபிராமி பரபரப்பு பேட்டி
சென்னை கலாசேத்ரா கல்லூரி பிரச்சினைக்கு 2 பேராசிரியைகள்தான்காரணம் என்றும், உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்றும், கல்லூரி முன்னாள் மாணவி ‘பிக்பாஸ்’ நடிகை அபிராமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு பேட்டி கொடுத்தார்.
சென்னை,
கலாசேத்ரா கல்லூரியில் நான் 2010-ம் ஆண்டு முதல், 2015-ம் ஆண்டு வரை படித்தேன். எனக்கு அங்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. பேராசிரியர் ஹரிபத்மனுக்கு ஆதரவாக நான் பேச வரவில்லை. யாரும் தூண்டியும் நான் இங்கு வரவில்லை. ஆனால் தமிழகத்துக்கு மட்டும் அல்ல, இந்தியாவின் கலாசார பெருமையாக விளங்கும் அந்த கல்லூரியில் தற்போது நடக்கும் பிரச்சினைகள் வேதனை அளிக்கிறது. கேரள மாநிலத்தவர், வெளிநாட்டினர் கூட அங்கு அதிகம் படிக்கிறார்கள்.
ஹரிபத்மனிடம் நான் பாடம் கற்றுள்ளேன். எனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக அங்கு பிரச்சினை இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இப்போது இந்த பிரச்சினை திடீரென்று இவ்வளவு பெரிதாக்கப்பட்டுள்ளது. சாதி பற்றி மாணவிகளிடம் பேசுவதாக சொல்கிறார்கள். என்னிடம் யாரும் சாதி பற்றி பேசவில்லை.
2 பேராசிரியைகள்தான் காரணம்
இந்த பிரச்சினை இவ்வளவு பெரிதாவதற்கு அங்கு வேலைபார்க்கும் 2 பேராசிரியைகள்தான் காரணம். நான் படிக்கும் காலத்தில் கூட இயக்குனர் லீலா சாம்சனுக்கு எதிராக அந்த ஆசிரியைகள் இருவரும் கையெழுத்து வேட்டை நடத்தினார்கள். மாணவிகளை வற்புறுத்தி கையெழுத்து போட வைத்தனர். இப்போது கூட அங்கு போராட்டத்தில் ஈடுபட முதலாம் ஆண்டு மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சலுகை காட்டுவதாக கூறி அழைத்துள்ளனர். அந்த பேராசிரியைகள் இருவரும் என்னிடம் கூட செல்போனில் 2 முறை பேசி, ஹரிபத்மனுக்கு எதிராக பேட்டி கொடுக்க வற்புறுத்தினார்கள். அவர்கள் ஏன், இப்படி ஆள் திரட்டி பேச வைக்கிறார்கள்.
முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு ஹரிபத்மன் பாடம் நடத்தவில்லை. அவர் முதுகலை படிப்பவர்களுக்குதான் பாடம் நடத்துகிறார். ஆனால் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளை போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். புகார் கொடுத்த மாணவி பற்றி நான் குறை கூற விரும்பவில்லை. அவர் கொடுத்த புகாரை பொய் புகார் என்றும் நான் சொல்லவில்லை. அது போலீஸ் விசாரணையில் உள்ளது. போலீஸ் நடவடிக்கையை நான் குறை கூறவில்லை.
மனஉளைச்சலில் மாணவி
புகார் கொடுத்துள்ள மாணவியே இப்போது மன உளைச்சலில் உள்ளார். அவருக்கு கவுன்சிலிங் நடக்கிறது. சில உண்மைகளை போலீஸ் அதிகாரிகளை சந்தித்து சொல்வதற்காக நான் இங்கு வந்தேன். கலாசேத்ராவில் நடக்கும் இப்போதுள்ள பிரச்சினைகள் பற்றி நானும் ஒரு புகார் மனுவாக தயாரித்து போலீசில் கொடுக்க இருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.