கடலில் தவறி விழுந்த மீனவரின் கதி என்ன?
கடலில் தவறி விழுந்த மீனவரின் கதி என்ன?
குளச்சல்:
குளச்சல் அருகே உள்ள மேலகுறும்பனையை சேர்ந்தவர் தேவதாசன் (வயது 40). குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்பிடித்தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் பைபர் படகில் கடலுக்குள் சென்று வலையை வீசிவிட்டு கரைக்கு வந்தார். இரவு வழக்கம் போல் வலையை இழுப்பதற்காக துறைமுகம் பகுதிக்கு சென்றார். அங்கு இரவு உணவு சாப்பிட்டு விட்டு கையை கடல்நீரில் கழுவ முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கடலில் விழுந்தார். அதன்பின்பு தேவதாசனை காணவில்ைல.
அவர் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது உறவினர் ஸ்டான்லி குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சகமீனவர்கள் உதவியுடன் தேவதாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்தது. ஆனால், மாயமான மீனவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது கதி என்னவென்று தெரியாமல் உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாயமான மீனவர் தேவதாசுக்கு ஜெகதா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.