2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய் கதி என்ன?
குடும்ப பிரச்சினையில் முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி 2 மகன்களுடன் தாய் தற்கொலைக்கு முயன்றார். இதில் மகன்கள் கரைக்கு வந்து தப்பினர். தாயை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
குடும்ப பிரச்சினையில் முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி 2 மகன்களுடன் தாய் தற்கொலைக்கு முயன்றார். இதில் மகன்கள் கரைக்கு வந்து தப்பினர். தாயை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
தம்பதி இடையே தகராறு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, தெற்கு லந்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 37). இவரது மனைவி அங்கம்மாள் (33). இந்த தம்பதிக்கு செல்வகுமார் (11), சிவகுமார் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
தீபாவளி பண்டிகை அன்று இரவில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அங்கம்மாள் தீபாவளிக்கு மறுநாள் மகன்களை அழைத்துக்கொண்டு திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு வந்தார்.
இதனையடுத்து அவர் மகன்களுடன் பஸ்சில் திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா மையத்துக்கு வந்தார். அதன் பின் அவர், மகன்களுடன் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கு நடுவில் உள்ள பகுதிக்கு சென்றார்.
தற்கொலை முயற்சி
கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து காணப்பட்ட அங்கம்மாள் மகன்களின் கைகளை பிடித்துக்கொண்டு காவிரி ஆற்றில் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சுதாரித்துக்கொண்ட மகன்கள் 2 பேரும் தாய் அங்கம்மாளின் பிடியில் இருந்து மீண்டதுடன், தாயையும் தடுத்து நிறுத்த போராடியுள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் ஆற்றில் ஆழமான பகுதி வரவே மகன்கள் 2 பேரும் தப்பி கரைக்கு வந்தனர். ஆனால் மகன்கள் கண் முன்னே அங்கம்மாள் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. இதைக்கண்ட மகன்கள் இருவரும் அக்கம் பக்கத்தினரிடம் சொல்லி அழுதுள்ளனர்.
மேலும் பெட்டவாய்த்தலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேரில் சென்ற சிறுவர்கள் நடந்த சம்பவத்தை கூறிகதறி அழுதனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வாத்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ேதடும் பணி தீவிரம்
இதனையடுத்து போலீசார், திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கம்மாளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நீண்ட நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று 2-வது நாளாக ஸ்ரீரங்கம் மற்றும் மேலூர் பகுதிகளில் காவிரி ஆற்றில் தேடும் பணி நடைபெற்றது. ஆனால் அங்கம்மாள் கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து அங்கம்மாள் சகோதரர் நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.