மனைவி, குழந்தையை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி காரணம் என்ன? போலீஸ் விசாரணை


மனைவி, குழந்தையை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x

நாவலூர் அருகே அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை மனைவி, குழந்தைக்கு கொடுத்து கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்றார்.

நாவலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரை அடுத்த தாழம்பூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்த் (வயது 32). இவர், தன்னுடைய மனைவி சுஜிதா (32), மகள் ஐஸ்வர்யா (7) ஆகியோருடன் வசித்து வந்தார். ஐஸ்வர்யா, நாவலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். ஆனால் தற்போது பள்ளியை விட்டு நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. அரவிந்த், நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை வெகு நேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். சத்தம் ஏதும் வராததால் இதுகுறித்து தாழம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

மனைவி, குழந்தை உயிரிழப்பு

அப்போது அரவிந்த் வலது கையில் கத்தியால் அறுக்கப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். அவருடைய மனைவி மற்றும் மகள் இருவரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே உயிருக்கு போராடிய அரவிந்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த தாய், மகள் இருவரின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அரவிந்திடம் விசாரணை மேற்கொண்டனர்.

கடன் தொல்லை

இதில் அவருக்கு ரூ.17 லட்சம் கடன் உள்ளதாகவும், கடன் கொடுத்தவர்கள் அதிகளவு நெருக்கடி கொடுத்ததால் மனஉளைச்சலில் வேறு வழி தெரியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து தனது குழந்தை மற்றும் மனைவிக்கு அதிக அளவு தூக்க மாத்திரைகளை கொடுத்து விட்டு, அதே மாத்திரைகளை தானும் உட்கொண்டது தெரிய வந்தது.

மேலும் மயக்கத்தில் இருந்த மனைவியின் வலது கை மணிக்கட்டு நரம்பை கத்தியால் துண்டித்து விட்டு அரவிந்த் தனது கையையும் அறுத்துக்கொண்டார். இதில் மனைவி மற்றும் மகள் இறந்தனர்.இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் தொல்லையால் மனைவி மற்றும் மகளை கொலை செய்தாரா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மற்றும் மகளை கொலை செய்து கணவனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story