சோழவந்தானில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தம்பதி தற்கொலை-காரணம் என்ன?
வீட்டில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோழவந்தான்
வீட்டில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கதவை திறக்கவில்லை
மதுரை மாவட்டம் சோழவந்தான் கோவிந்தம்மாள் தெருவை சேர்ந்தவர் திருப்பதி(வயது 51). இவருடைய மனைவி தீபா(42).
மதுரை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் டிரைவராக திருப்பதி பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. கடந்த வாரம் தாலி பெருக்கும் விழா நடத்தி உள்ளனர். மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.
எனவே கணவன்-மனைவி மட்டும் ஊரில் வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் வரை இவர்களின் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டிபார்த்தனர். அப்போதும் கதவை அவர்கள் திறக்கவில்லை. இதையடுத்து அவர்களின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, இருவரும் போனை எடுக்கவில்லை.
ஒரே சேலையில்...
இதனால் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது கணவன்-மனைவி, ஒரே சேலையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக சோழவந்தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரணம் என்ன?
கணவன்-மனைவி எதற்காக தற்கொலை செய்து ெகாண்டனர் என தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.