எய்ம்ஸ், விமான நிலைய விரிவாக்க திட்டங்கள் நிலை என்ன? ஜே.பி.நட்டா விளக்கம்


எய்ம்ஸ், விமான நிலைய விரிவாக்க திட்டங்கள் நிலை என்ன? ஜே.பி.நட்டா விளக்கம்
x

எய்ம்ஸ், மதுரை விமான நிலைய விரிவாக்க திட்டங்களின் நிலை என்ன? என்பது குறித்து மதுரையில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விளக்கம் அளித்து பேசினார்.

மதுரை,

பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதியம் 1 மணி அளவில் மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜனதா நிர்வாகிகள் பூரண கும்பம், மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து ரிங்ரோடு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பல்வேறு துறை வல்லுனர்கள், தொழில் அதிபர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில், மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, சட்டமன்ற பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசியதாவது:-

பொருளாதார வளர்ச்சி

இந்திய நாட்டை சரியான அரசு ஆட்சி செய்கிறது. தமிழகத்திலும் அதன் வளர்ச்சியை காணமுடிகிறது.

காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது பா.ஜ.க. ஆட்சியில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து உள்ளது. இந்தியாவின் மின்னணு ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ளது. தற்போது நமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறி இருக்கிறது.

எங்கள் கொள்கைகள் விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்துறைக்கு ஆதரவானவை.

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமானத்திற்கு முந்தைய பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. மதுரையில் எய்ம்ஸ் செயல்பட தொடங்கியதும் மாணவர் சேர்க்கை இடங்களும் 100-ல் இருந்து 250-ஆக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மொத்தம் ரூ.1,264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் பிரிவுக்காக கூடுதலாக ரூ.134 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கி, அதனை பிரதமர் மோடி திறந்து வைப்பார்.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ரூ.550 கோடி மத்திய அரசு ஒதுக்கியது. மத்திய அரசு 633.17 ஏக்கர் நிலத்தை கேட்டநிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை கொடுத்தது. தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை. இருந்தும் சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story