அரசு பள்ளிகளின் பாதுகாப்பை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகள்?


அரசு பள்ளிகளின் பாதுகாப்பை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகள்?
x

அரசு பள்ளிகளின் பாதுகாப்பை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகள்? குறித்து கூறினர்.

விருதுநகர்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதவிர மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியினை கொண்டு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் பங்களிப்பு

தமிழக அரசின் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பொதுமக்கள் பங்களிப்போடு அரசு பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், ஸ்மார்ட் வகுப்பறைகள் போன்ற நவீன கணினி மயமாக்கப்பட்ட வகுப்பறைகள் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு வகைகளில் அரசு பள்ளிக்கூடம் வளர்ச்சி பெற்று வருகிறது.

மேலும் பள்ளி வளாகங்களில் மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சேதமடைந்த கட்டிடங்கள் இருந்தாலும் அல்லது கட்டிட இடிபாடுகள் இருந்தாலும் அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் நடப்பு கல்வி ஆண்டு தொடக்கத்தில் இம்மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

கல்வியாளர்கள் அதிர்ச்சி

விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் சாணம் கலந்ததாக தகவல் வெளியானதால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும், மாவட்ட பள்ளி கல்வித்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததாக கூறப்படுகிறது.

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

அருப்புக்கோட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் செந்தில்வேல்முருகன்:-

அரசு பள்ளிகளில் மாணவர்கள் பெரும்பாலும் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மட்டுமே குடிநீர் அருந்துகின்றனர். வீட்டில் இருந்து அவர்கள் குடிநீர் கொண்டு வருவது கிடையாது. எனவே குடிநீர் தொட்டியை யாரும் எளிதில் அசுத்தம் செய்யாதபடி மூடி போட்டு மூட வேண்டும். பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கண்டிப்பாக சுற்றுச்சுவர் அமைத்து கொடுத்து பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும்.

இரவு காவலர்கள்

தமிழ்நாடு தலைமை ஆசிரியர் கழகம் தலைவரும், தமிழ்ப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான அண்ணாதுரை:-

சின்னமூப்பன்பட்டி சம்பவத்திற்கு பின்பு அரசு பள்ளிகளில் குடிநீர் தொட்டிகள் பூட்டு போடப்பட்டு பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளில் சுற்று சுவர் கட்ட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் காவலர்கள் நியமித்தால் இரவு நேரங்களில் வெளிநபர்கள் பள்ளி வளாகத்திற்குள் செல்லாமல் இருக்க வாய்ப்பு ஏற்படும்.

விளையாட்டு மைதானம்

ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த சுமதி:-

அனைத்து அரசு பள்ளிகளிலும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். சுற்றுச்சுவர், கழிப்பறை வசதி, கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை அமைப்பதுடன் விளையாட்டு மைதானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி நபர்கள் தேவையின்றி பள்ளிக்கூடத்திற்குள் வருவதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், இரவு, பகல் என 24 மணி நேரமும் பள்ளியை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story