மதுரை ஐகோர்ட்டுக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? -நீதிபதிகள் கேள்வி
மதுரை ஐகோர்ட்டுக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வக்கீல் அருண்நிதி, கே.கே.ரமேஷ், வக்கீல் முனியசாமி உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களில், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தற்போதைய நீர்நிலைகள், நீர்வழித் தடங்களிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், தூர்வாரி தண்ணீரை தேக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்காமல், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். தென் மாவட்டங்கள் பயனடையும் வகையில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பதை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கோர்ட்டு உத்தரவின்படி, தற்போது நீர் நிலைகளை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்க கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை ஐகோர்ட்டுக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை குறித்து, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.