மாற்றுத்திறனாளி பக்தர்களுக்காக சக்கர நாற்காலி வசதி
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்காக சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்காக சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமயபுரம் கோவில்
மிகவும் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக இக்கோவில் நிதியில் இருந்து வாகன நிறுத்துமிடம், பல்வேறு வசதிகளுடன் கூடிய வரிசை வளாகம் உள்ளிட்டவை கட்டி முடிக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசை வளாகத்தில் கட்டண வரிசை மற்றும் பொது தரிசனத்திற்கு தனித்தனி நுழைவு மண்டபங்கள், காத்திருக்கும் கூடம், பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள், எஸ். எஸ். தடுப்புகள், மின்விளக்குகள், மின்விசிறிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என 200-க்கும் மேற்பட்ட கழிவறைகள், பொருட்கள் வைப்பு அறை, நான்கு அவசர கால வழிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சக்கர நாற்காலி வசதி
இந்நிலையில், சுமார் ஒரு மீட்டர் அகலம் உள்ள வரிசை வளாகத்தில் முண்டியடித்துக் கொண்டு செல்பவர்களால் வரிசையில் வரும் பக்தர்கள் அவதி அடைகின்றனர். எனவே, அதை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் ஒவ்வொருவராக வரிசையில் கோவிலுக்குள் செல்ல வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் அம்மனை தரிசனம் செய்ய கிழக்கு கோபுரம், வடக்கு மற்றும் தெற்கு வாசல் வழியாக செல்ல வேண்டும். தரிசனம் முடிந்த பிறகு அன்னதான கூடத்திற்கு செல்லும் பக்தர்கள் தெற்கு வாசல் வழியாக செல்ல வேண்டும்.
மேலும், மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்துச் செல்ல பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை, பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தகவலை கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.