நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது எப்போது?
வடகாடு பகுதியில் நீர் நிலைகளில் உள்ள வரத்து வாரிகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரத்து வாரிகள் ஆக்கிரமிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, மாங்காடு பகுதிகளில் அம்மன்குளம், நெடுங்குளம், கூணக்குளம், செட்டிகுளம், பள்ளிக்குளம், திருமுச்சிகுளம், பட்டிகுளம், சிறுகுளம், அன்னக்குளம், தீத்தானிக்குளம், அனவயல் மற்றும் ஆண்டவராயபுரம் பகுதிகளில் உள்ள பெரியகுளம், இலைச்சிகுளம், உய்யாநேரி குளம், மாவடியான்குளம் இப்படி ஒவ்வொரு ஊர்களிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள இடங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் மூலமாக, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு செல்லும் வரத்து வாரிகளையும் கூட விட்டு வைக்காமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலையில் இருந்து வருகிறது.
தூர்ந்து போனது
மேலும் குளங்களுக்கு மழை காலங்களில் தண்ணீர் செல்லும் வரத்து வாரிகளும் தூர் வாரப்படாமல் தூர்ந்து போன நிலையில், முட்புதர்கள் மற்றும் கருவேல மரங்கள் மண்டிய நிலையில் காணப்படுகிறது. மேலும் அனவயல் ஆண்டவராயபுரம் பகுதியில் பெய்யும் கனமழையால் பெரியகுளம் தண்ணீரால் நிரிம்பி வழிந்து நெடுவாசல் கீழ்பாதி மற்றும் மேல்பாதி பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் வரத்து வாரிகளும் தண்ணீர் செல்ல வழியின்றி கருவேல மரங்கள் புதர் மண்டி கிடக்கிறது. சுமார் நூறு ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை இருப்பதாகவும் இப்பகுதி விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் குறை கூறி வருகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:-
உரிய நடவடிக்கை தேவை
அனவயல் ஜீவா நகரை சேர்ந்த மணியன் கூறுகையில், நீர் நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் கூட அதனை செயல்படுத்த அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். ஏற்கனவே சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் மாயமானதால் கடந்த காலங்களில் பெய்த கன மழையால் தண்ணீரால் தத்தளித்த சென்னை மக்களை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். அதுபோல இப்பகுதிகளில் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை தேவை என்றும் தெரிவித்தார்.
நீர் மட்டம் உயர வாய்ப்பு
அனவயல் ஆண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த கருப்பையா கூறுகையில், நீண்ட காலமாகவே நீர்நிலை வரத்து வாரிகள் தூர் வாரப்படாமல் இருந்து வருகிறது. இவற்றை சீரமைத்து கொடுத்தால் குளங்களுக்கு சீரான தண்ணீர் சென்று நீர் மட்டம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறினர்.
அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது வேதனை
மாங்காடு பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் மாரிச்செல்வம் கூறுகையில், இப்பகுதிகளில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை போல வர வேண்டும். ஆக்கிரமிப்பு என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இது இனி வரும் தலைமுறைக்கு ஏற்றதல்ல, இதனை தடுக்க வேண்டிய அதிகாரத்தில் இருப்பவர்கள் கண்டும் காணாமல் இருப்பது வேதனையை தருவதாக உள்ளது என்றார்.
பல்வேறு வழக்குகள்
மாங்காடு இலுப்பை புஞ்சை பகுதியை சேர்ந்த சேகர் கூறுகையில், ஆக்கிரமிப்பு என்பது ஏரி, குளம், வரத்து வாரி மட்டுமின்றி நெடுஞ்சாலை பகுதிகளில் பொதுநலம் இன்றி ஆக்கிரமிப்புகள் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் ஒவ்வொரு ஊராக ஆக்கிரமிப்புகளை கணக்கிட்டு அகற்றி இருந்தாலும் கூட இந்நேரம் அனைத்தையும் சரி செய்து சுமுகமான தீர்வை எட்டியிருக்கலாம். இவைகள் சுமுகமாக தீர்க்கப்படாத காரணங்களால் தான் இன்னும் கிராமப்புற பகுதிகளில் பல்வேறு வகையான பிரச்சினை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.