மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தபோதுமயங்கி கிணற்றுக்குள் விழுந்து தொழிலாளி சாவு
அந்தியூர் அருகே மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த போது மயங்கி கிணற்றுக்குள் விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்தியூர்
அந்தியூர் அருகே மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த போது மயங்கி கிணற்றுக்குள் விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்..
நீச்சல் கற்றுக்கொள்ள...
அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் குழியூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 36). கூலி தொழிலாளி. இவருடைய மகன் ஹரிஹரன் (12). இவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார்.
அப்போது அவர் தந்தையிடம் கிணற்றில் நீச்சல் கற்றுக்கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்தார். உடனே அவர் மகனை அழைத்துக்கொண்டு அருகே அட்டகல்லூர் பகுதியில் உள்ள 60 அடி ஆழமுடைய கிணற்றுக்கு சென்றார். அதில் சுமார் 40 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது.
கிணற்றில் மூழ்கி சாவு
சேகரும், ஹரிஹரனும் கிணற்றில் இறங்கினார்கள். பின்னர் சேகர் மகனுக்கு தண்ணீரில் நீச்சல் அடிக்க கற்றுக்கொடுத்தார். சிறிதுநேரம் கழித்து இளைப்பாறுவதற்காக சேகர் கிணற்றின் பக்கவாட்டில் உள்ள படிக்கட்டில் ஏறி நின்றார். அப்போது திடீரென அவர் மயங்கி கிணற்றுக்குள் விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்.
இதை பார்த்த ஹரிஹரன் அதிர்ச்சி அடைந்தார். "காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என்று அபயக்குரல் எழுப்பினார். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அதற்குள் மகன் கண் முன்னே தண்ணீரில் மூழ்கி சேகர் பரிதாபமாக இறந்தார்.
சோகம்
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சேகரின் உடலை மீட்டனர். பின்னர் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகன் கண் முன்னே தொழிலாளி கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.