ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு விடிவு காலம் எப்போது?


ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு விடிவு காலம் எப்போது?
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். மழைக்காலங்களில் குளமாகும் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு விடிவு காலம் எப்போது? என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள் உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். மழைக்காலங்களில் குளமாகும் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு விடிவு காலம் எப்போது? என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகள் உள்ளனர்.

நகராட்சி மார்க்கெட்

நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளை அறுவடை செய்த பின்னர் சிறு, குறு விவசாயிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டமைக்கப்பட்ட ஊட்டி நகராட்சி மார்க்கெட் இந்தியாவின் முன்னோடி மாதிரி சந்தையாக கருதப்பட்டது. இங்கு 1,500 நிரந்தர கடைகளும், 500 தற்காலிக கடைகளும் உள்ளன. இந்த மார்க்கெட்டுக்கு தினமும் 3500 முதல் 4000 வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.

பொதுமக்கள் அவதி

மேலும் வாரயிறுதி நாட்களில் 4,000 முதல் 5,000 வாடிக்கையாளர்கள் வருவார்கள். வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இங்கு 15 நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பழமையான மார்க்கெட்டாக இருந்தாலும், இங்கு பலத்த மழை பெய்யும் சமயங்களில் எல்லாம் கடைகள் மற்றும் வளாகங்களில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. மழைநீர் செல்லும் வடிகாலில் அடைப்பு ஏற்படுவதால் இதே நிலை தொடர்கிறது. இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர். இதுபற்றி பொதுமக்கள் கூறுவதை பார்க்கலாம்:-

கூட்ட நெரிசல்

பிச்சையம்மாள் (வக்கீல்):-

ஊட்டி நகராட்சி மார்க்கெட் பல ஆண்டுகளாக கூட்ட நெரிசல் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் அதிகரித்து வரும் வாடிக்கையாளர்கள் வரவை, அங்கு சமாளிக்க முடியவில்லை. எதிரில் ஒருவர் நடந்து வந்தால் மற்றவர் மீது மோதாமல் செல்ல முடியாது. இதனால் பெண்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

இதேபோல் மார்க்கெட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சி கடைகள், துணிக்கடைகள், மருந்து கடைகள், மளிகை கடைகள் என தனித்தனியாக இருந்தது. தற்போது இறைச்சி கடைகள், பழக்கடைகள், ஓட்டல்கள் அடுத்தடுத்த கடைகளாக உள்ளன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். சுய உதவிக்குழுக்கள் மூலம் மார்க்கெட்டை சுத்தமாக வைக்கும் நடைமுறை முன்பு இருந்தது. அந்த நடைமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்.

போக்குவரத்து பாதிப்பு

சிவசுப்பிரமணியம்:-

மார்க்கெட்டுக்கு உள்ளே வரும் பல நுழைவுவாயில்கள் சரியாக செயல்படுவதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் உள்ளே வர அவதிப்படுகின்றனர். இதேபோல் போதிய பாதுகாப்பு இல்லாததால் அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. சமீபத்தில் கூட மார்க்கெட்டில் தொடர்ச்சியாக கடைகளை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையோரங்களில் நிறுத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் வாகனங்களை நிறுத்துவது பெரிய சவாலாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைகின்றனர். எனவே, வாகனங்களை நிறுத்த வசதி ஏற்படுத்த வேண்டும்.

வெள்ளக்காடாகும் மார்க்கெட்

டென்னிஸ் (மார்க்கெட் வியாபாரி):-

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை போல் இல்லாமல் நீலகிரி மாவட்டம் பெரும்பாலான மாதங்கள் மழைக்காலம் அதிகம் உள்ள பகுதியாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒவ்வொரு முறையும் பெரிய மழை பெய்து விட்டால் மார்க்கெட்டுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது. அன்றைய தினம் வியாபாரம் இல்லாமல் போய் விடுகிறது. ஏற்கனவே சரக்கு கேட்டு போன் மூலம் ஆர்டர் கொடுத்த வழக்கமான வாடிக்கையாளர்கள் கூட மார்க்கெட்டுக்கு வருவதை தவிர்த்து விடுவார்கள்.

இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, மார்க்கெட்டில் மழைநீர் புகுவதை தடுத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதே சமயத்தில் மார்க்கெட்டை சுற்றி மாடுகள் மற்றும் எருமைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் பலர் மார்க்கெட்டுக்குள் வர அச்சப்படுகின்றனர். மேலும் மார்க்கெட் சாலைகளில் விபத்தும் ஏற்படுகிறது.

அடிப்படை வசதிகள்

மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜா முகமது:-

பலத்த மழை பெய்தால் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் இருந்து மழைநீர் கழிவுநீருடன் கலந்து மார்க்கெட்டுக்குள் புகுந்து விடுகிறது. ஆனால், மார்க்கெட்டில் இருந்து கால்வாய்க்கு செல்லும் குழாய் ஆங்கிலேயர் காலத்தில் பதிக்கப்பட்ட சிறிய குழாய் என்பதால், அதன் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் மார்க்கெட்டில் தேங்கி விடுகிறது. 20 ஆண்டுகளாக உள்ள இந்த பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு கடைக்கு மாத வாடகை ரூ.800 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.2500 வரை அதிகரித்துள்ளது. ஆனால், மார்க்கெட்டின் தரம் இதுவரை உயர்த்தப்படவில்லை. மார்க்கெட் வளாகத்தில் ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. எனவே, மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை மேற்கொண்டு, மார்க்கெட் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story