கடலில் சங்கு குளித்தபோது தொழிலாளி மூச்சுத்திணறி சாவு
தூத்துக்குடி அருகே கடலில் சங்கு குளித்தபோது தொழிலாளி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி அருகே கடலில் சங்கு குளித்தபோது தொழிலாளி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.
சங்குகுளி தொழிலாளி
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் மைக்கேல்ராஜ் (வயது 26). இவருக்கு சொந்தமான படகில் மைக்கேல்ராஜ் உள்பட 10 பேர் சங்கு குளிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் திரேஸ்புரத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். அவர்கள் காயல்பட்டினத்தில் இருந்து சுமார் 20 கடல் மைல் தொலைவில் சங்கு குளித்துக் கொண்டு இருந்தனர்.
பரிதாப சாவு
அப்போது கடலுக்குள் சென்ற மைக்கேல் ராஜிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர் படகுக்கு திரும்பி வந்தாா். ஆனால் அவர் படகுக்கு வந்ததும் மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. சக மீனவர்கள் அவரை கரைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் அதிகாலையில் கரைக்கு வந்து சேர்ந்தனர். உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மைக்கேல் ராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.